ஜாக்சன்வில் தமிழ் மன்றம் க்ளார்க் ஹவுஸ் பார்க் என்ற பூங்காவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. முதல் நாள் இரவே திரு மணி அண்ணாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அங்கு அவரும் அவரது துணைவியாரும் அன்பாக உபசரித்தனர். வீட்டில் விளைந்த வாழைப் பழமும், விடியற்காலையின் அழகிய வானமும், உரையாடல்களும், அவர்களது காலை உணவும் மனதுக்கு நிறைவாக இருந்தன. மணி அண்ணன் அவர்கள் இந்த நிகழ்வு அமையக் காரணமாக இருந்தவர். தமிழ் மன்றத்துக்கு என்னை அறிமுகம் செய்து, இந்நிகழ்வினை அமைக்கப் பரிந்துரைத்தார். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

காலையில் எட்டு மணி சுமாருக்கு அரங்கத்திற்கு வந்துவிட்டோம். 

 திரு பிரபுவின் தலைமையிலமைந்த குழு ஒரு பெரிய திறந்த அரங்கில் இருக்கைகளை முனைப்பாக அமைத்தது. சுமார் 60 பெரியவர்களும் 40 குழந்தைகளுமாக அந்த இடம் கலகலப்பாக இருந்தது. பெரியோர்களுக்கான மூச்சுப் பயிற்சிப் பட்டறை ஒரு அரங்கிலும், சிறுவர்களுக்கான ஆசனப் பயிற்சிகள் இன்னொரு அரங்கிலும் (சக்தி யோகாலயாவின் கவிதா நடத்தினார்) நடந்தன. குறித்த நேரத்தில் அனைவரும் வந்திருந்து கலந்துகொண்டனர். மூச்சுப் பயிற்சிகளைத் திருமந்திரம், சித்தர் பாடல்கள், அறிவியல் விளக்கங்களோடு அறிமுகம் செய்தேன். மக்கள் மிகவும் ஆழ்ந்திருந்து உள்வாங்கிக்கொண்டனர். பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர், கேள்விகளைத் தயங்காமல் கேட்டுத் தெளிவுபெற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் மூச்சுப் பயிற்சியில் போனதே தெரியவில்லை.

பிறகு குழந்தைகளுக்கான மூச்சுப் பயிற்சிகளுக்காக வேறொரு அரங்கத்திற்குச் சென்றேன். 5 வயது முதல் கல்லூரிப் பருவம் வரை குழந்தைகள் இருந்தனர். அவர்களுக்கு எனது ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தபோது நிறைய ஆர்வமாகிக் கேள்விகளைக் கேட்டார்கள். புகைபிடித்தல், புற்று நோய், கதிரியக்கம், ஆராய்ச்சி, மூச்சுப் பயிற்சி, மூளை என்று எல்லாத் திசைகளிலும் கேள்விகளைக் கேட்டபோது நான் மிகவும் மகிழ்வடைந்தேன். நல்ல உரையாடலாக அது இருந்தது. சில குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தும் வந்து பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு பிள்ளைகள் வந்து உங்களோடு படம் எடுத்துக் கொள்ளட்டுமா என்றார்கள். ஒரு குழந்தை, மாமா என் பெயரையும் புத்தகத்தில் எழுதித் தாருங்கள் என்றார். ஒரு பையன் வந்து, எனது சொந்த ஊர் இது என்று எனக்குத் தெரிந்த ஊரைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். குழந்தைகளோடு நான் எப்போது அன்பாகவும் விளையாட்டாகவும் இருப்பதோடு அவர்களுக்குத் தேவையானவற்றைப் பக்குவமாகச் சொல்லிக் கொடுத்துவிடுவேன் என்பது எனக்குத் தெரியும்! மதிய உணவினைச் சத்துணவாக அமைத்திருந்தனர். பலரும் சமைத்து எடுத்து வந்த அறுசுவை உண்டி. கூழ், மோர் மிளகாய், மாங்காய், கறுப்புக் கவுணியரிசி இனிப்புச் சோறு, மோர், பொங்கல், வடை என்று அருமையாய்ச் செய்திருந்தனர். சாப்பிட்ட பிறகு மொய் எழுதும் வழக்கம் போல, அனைவரும் வந்து திருமூலர் தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கிச் சென்றனர். நன்கொடை வழங்கியவர்களுக்குக் கையெழுத்திட்டு மூச்சுப் பயிற்சி புத்தகம் அன்பளிப்பாக வழங்கினோம். படங்கள் எடுத்துக் கொண்டோம். அனைவரும் நன்றிகளையும் பாராட்டுகளையும் அடுத்த பணிகளுக்கான திட்டங்களையும் பரிமாறிக் கொண்டோம். மனமகிழ்வுடன் கிளம்பினேன். நன்றி ஜாக்சன்வில் தமிழ் மன்றம்!